Translate

Sunday, 14 April 2013

மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள 1500 டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு திட்டம்

மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள 1500 டாஸ்மாக் கடைகளை அகற்ற அரசு திட்டம
   
சேலம்,- தேசிய நெடுஞ்சாலைகளை தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் உள்ள 1500 டாஸ்மாக் மதுபான கடைகளையும் அகற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6500 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள கடைகளில், வாகன ஓட்டிகள் மது அருந்தி செல்வதால் விபத்துகள் அதிகரிப்பதாக ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி 100 மீட்டர் தூரத்துக்குள் உள்ள 504 டாஸ்மாக் கடைகளை மார்ச் 31&ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து பல இடங்களில் சாலையோரம் உள்ள கடைகளை ஊருக்குள் மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஊருக்குள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பெரும்பாலான கடைகளுக்கு இன்னும் மாற்று இடம் கிடைக்கவில்லை. புதிய இடத்துக்கு மாற்றப்பட்ட கடைகளிலும் மது விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக உள்ள கடைகளையும் அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எத்தனை கடைகள் மாநில நெடுஞ்சாலை ஓரமாக 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ளது என்பது குறித்து கணக்கெடுக்க டாஸ்மாக் மேலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில், மாநிலம் முழுவதும் 1500 டாஸ்மாக் கடைகள் மாநில நெடுஞ்சாலை ஓரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கடைகளையும் அகற்றினால், டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைத்து வரும் வருவாய் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், ‘‘ஐகோர்ட் உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதே எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. அந்த பட்டியலில் உள்ள பல கடைகளுக்கு இன்னும் புதிய இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடைகளையும் இடமாற்றம் செய்ய முடிவெடுத்திருப்பது எங்களுக்குதான் பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய இடம் தேடுமாறு டாஸ்மாக் அதிகாரிகள் தரும் நெருக்கடி ஒருபுறம் இருக்க, கலால் அதிகாரிகள் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 333 அடி தூரத்துக்குள் கடை இருக்கிறதா என மீட்டர் அளவுகோல் வைத்து துல்லியமாக அளந்து பார்க்கின்றனர். எனினும், ஐகோர்ட் உத்தரவுபோல இந்த கடைகளை அகற்றுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை’’ என்றனர்.

இதுகுறித்து சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் தனசேகரனிடம் கேட்டபோது, ÔÔமாநில நெடுஞ்சாலை ஓரமாக உள்ள டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள் வேறு இடத்துக்கு எப்போது அகற்றப்படும் என்பது இப்போது உடனடியாக தெரியாதுÕÕ என்றார்

No comments:

Post a Comment