Translate

Thursday, 30 May 2013

நெடுஞ்சாலைப் பயணத்தில் டயர் வெடித்தால் சமாளிப்பது எப்படி?

நெடுஞ்சாலைப் பயணத்தில் டயர் வெடித்தால் சமாளிப்பது எப்படி?

திறமையான ஓட்டுனராக இருந்தாலும் நெடுஞ்சாலைப் பயணத்தில் பயப்படும் ஒன்று டயர் வெடித்துவிடும் அபாயத்தை கண்டுதான். டயர் வெடித்துவிட்டால் வண்டியின் கட்டுப்பாட்டை முழுமையாய் இழக்க வேண்டியிருக்கும். இதுவே எஸ்யுவி, எம்யுவிக்கள் என்றால் தலைகீழாக கவிழ்ந்துவிடும் அபாயமும் உண்டு. அம்மாதிரி சமயங்களில் நிலைமையை எப்படி சமாளிப்பது? பொறுமையும் சமயோகிதமும் சாதுர்யமும் நிலைமையை சமாளிக்க உதவும். பொதுவாக நெடுஞ்சாலைகளில் நீண்ட நேரப் பிரயாணங்களில் பாதுகாப்பான வேகத்தில் செல்வது நல்லது. டயர் வெடித்துவிட்டால் உடனடியாக சடாரென்று ப்ரேக் பெடலை அழுத்துவது நல்லதல்ல திடீரென்று ப்ரேக் போட்டால் வண்டியின் கட்டுபாடு மேலும் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. அதே போல் வண்டியின் ஆக்சிலேட்டரிலிருந்தும் காலை உடனே எடுக்கக் கூடாது. நிதானமாக கொஞ்சகொஞ்சமாக காலை எடுக்க வேண்டும். ஏனென்றால் டயர் வெடித்ததினாலேயே வண்டியின் வேகம் குறைந்துவிடும். அது திடீரென்று குறையாமல் இருப்பதே நல்லது.
இந்நேரத்தில் க்ரூபிஸ் கண்ட்ரோல் போட்டிருந்தால் அதையும் உடனே மாற்றிவிட வேண்டும். முடிந்தவரை வண்டியை நேராக இருக்கும்படி வைப்பது வேண்டும். ஏனென்றால் டயர் வெடித்தபின் வண்டி ஒருபுறமாக இழுக்கப்படும். அந்நேரத்தில் ஸ்டியரிங்கை மறுபுறமாக திருப்பி வண்டியை நேராக்க வேண்டும். அப்படி திருப்பும் போது ஸ்டியரிங்கை வேகமாகவும் ஒரே பக்கமாகவும் கூடத்திருப்பக்கூடாது. அப்படி திருப்பினால் அதனாலும் வண்டி கவிழ்ந்து விடும் அபாயம் நேரலாம். மெதுவாக ஸ்டியரிங்கை திருப்பி பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிடுதல் வேண்டும். சைட் இன்டிகேட்டரை போட்டு மெதுவாக வண்டியின் வேகம் குறைந்தபின் லேசாக ப்ரேக்கை அழுத்தி பின்பு வண்டியை ஓரமாக நிறுத்த வேண்டும். வண்டியின் முன் சக்கரம் வெடித்துவிட்டால் எந்த டயர் வெடித்ததோ அந்த பக்கமாக கார் இழுக்கப்படும். எனவே அதற்கு எதிர் திசையில் ஸ்டியரிங்கை திருப்பி நேராக்க வேண்டும். இதுவே காரின் பின் டயர் வெடித்துவிட்டால் கார் இப்படியும் அப்படியுமாக அலையும் இரண்டு கைகளையும் ஸ்டியரிங் வீலில் வைத்து கண்ட்ரோல் செய்து நல்லது. ஏனென்றால் ஸ்டியரிங் வீல் இந்நேரங்களில் மிகவும் கடினமாகிவிடும்.
டயர் ஒரு புறம் இல்லாமல் சக்கரத்தின் உலோகத்தில் தேய்ந்து கொண்டே கார் பயணிப்பதால் கார் சுத்தமாக வேறு மாதிரி செயல்படும். எனவே கடுமையான ஸ்டியரிங் செயல்பாடு, ப்ரேக் மற்றும் அக்சிலரேஷனை தவிர்ப்பது நல்லது. இதுவே எஸ்யுவியோ எம்யுவியோவாக இருந்தால் வண்டி கவிழ்வது பெரும்பாலும் நடைபெறும். எனவே இவ்வண்டிகள் ஓட்டும்போது சீரான வேகத்தை கடைப்பிடிப்பது நல்லது. சாலை ஈரமாக இருந்தால் நிலைமையை இன்னும் கூட மோசமாகலாம். பொதுவாக டயர் வெடிக்கும்போது பெரிய சத்தம் கேட்கும் அத்துடன் சேர்ந்து வண்டியின் போக்கை வைத்து நிலைமையை கணித்துவிடலாம். பயப்படாமல் பதட்டப்படாமல் இருந்தால் நிலைமையை முழுவதுமாய் சமாளித்துவிடலாம்.
வந்தபின் நிலைமையை சமாளிப்பதைவிட வரும் முன் காப்பதே நல்லது அல்லவா. எனவே டயர் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். டயரில் போதிய காற்று இல்லாமல் இருப்பதே 75% டயர் வெடிப்பிற்கு காரணமாகும். எனவே டயரின் காற்றழுத்ததை வாரம் ஒரு முறை பரிசோதிப்பது நல்லது. நல்ல ப்ராண்ட் டயரை உபயோகிப்பது, ட்யூப்லெஸ் டயர் உபயோகிப்பது போன்றவையும் இம்மாதிரி அசம்பாவிதத்தை தவிர்க்க உதவும்.

No comments:

Post a Comment