மாற்றியோசி! மாற்றுவதற்கு யோசி!!
ஒரு காரை வாங்கினால் அதில் சிற்சில மாற்றங்களான ஹார்ன், லைட் போன்றவைகள், மியூசிக் சிஸ்டம், சீட் கவர், ஸ்டியரிங் வீல் கவர் போன்றவைகளை செய்தோம். ஓட்டினோம் என்றுதான் பலரும் இருப்பர். ஆனால் சிலர் மட்டும் வாகனத்தின் செயல்திறன் வெளித்தோற்றம் மற்றும் முக்கிய அம்சங்களிலேயே பல மாற்றங்களைச் செய்து தனக்காகவே தயாரிக்கப்பட்டது போல தன் முத்திரையை அதில் பதிக்க விரும்புவர். இம்மாதிரி மாற்றங்களைக் காரில் செய்வதற்கு முன்பு சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. அவையென்னவென்று பின்வருமாறு பார்க்கலாம்.
வாகனத்தை ஓட்டுவது பெரிதல்ல. அதை பாதுகாப்பாக ஓட்டுவதே புத்திசாலித்தனம். மாற்றம் செய்து அதிக பவரை பெற்ற பின்தான் அதிக பொருப்பும் பொறுமையும் தேவைப்படுகிறது. எனவே வேகத்தை விவேகத்தோடு இடத்திற்கு தகுந்தாற்போல் காட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி முறையாக ஓட்டக் கற்றிருப்பதுடன் தொழில் ரீதியான ரேஸ், ராலி பள்ளிகள் மூலம் ஓட்டும் உத்திகளை சிறப்பாக முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.
அடுத்தது காரை சரியான நபராகப் பார்த்து மாற்றங்கள் செய்ய ஒப்படைக்க வேண்டும். கார்களை மாற்றி அமைக்கத்தேவையான இடவசதி கருவிகள், தொழில்நுட்ப அறிவு போன்றவை அங்கு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். பெயர் பெற்ற சிலர் இதற்கென இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்தவர் நண்பர் மூலம் தெரிந்துக் கொண்டு அங்கு காரை விட வேண்டும். காரை மேம்படுத்துதல் என்பது படிப்படியாக செய்ய வேண்டிய வேலையாகும். எனவே ஒவ்வொன்றாக செய்து சரிபார்த்து பின்பு அடுத்த கட்டம் என்று போவது நல்லது. காரின் என்ஜினே அதன் முக்கியமான பாகம் என்பதாலும், அது மிகவும் சிக்கலான பாகங்களின் இணைப்பு என்பதாலும் கவனமாக மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாகமும் இணக்கமாக இணைந்து செயல்பட்டால்தான் காரின் செயல்திறன் அதிகரிக்கும். எனவே காரின் என்ஜினின் சக்தியை மேம்படுத்தும் வேலை செய்யும்போது மற்ற வாகனங்களை அதற்கேற்ப மாற்ற வேண்டி இருக்கும்.
காரில் மாற்றங்கள் செய்து மேம்படுத்துதல் என்பது பணம் அதிகம் செலவாகக்கூடிய ஒன்று எனவே மாற்றம் செய்வதற்கு முன்பே நம் பட்ஜெட்டை தீர்மானித்துக் கொண்டு இறங்குவது நல்லது. படிப்படியாக மாற்றம் செய்வது பட்ஜெட்டை தீர்மானிக்கவும் உதவியாக இருக்கும். மேலும் செயல்திறனை அதிகரிக்க கார் என்ஜினின் கம்ப்ரெஷன் ரேஷ்யோவை அதிகப்படுத்தும் போது எரிபொருள் சிக்கனம் கிடைக்காது. எனவே எரிபொருள் செலவு வரும்காலத்தில் அதிகரிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் கார் வாரண்டி கவரேஜிற்குள் இருந்தால் கார் மேம்படுத்தலினால் அது ரத்தாகிவிடும் என்பதையும் மறக்கக்கூடாது. சில கார்கள் மட்டும் மாற்றங்கள் செய்ய ஏதுவானவையாக இருக்கும். ஹோண்டா, சுசூகி போன்றவைகளின் பாகங்கள் சுலபமாக கிடைக்கக் கூடியவையாகவும், மாற்றம் செய்ய ஏற்றவையாகவும் இருக்கும். குறிப்பாக செயல்திறனை அதிகரிக்க சில கார்களே சிறந்ததாக இருக்கும். எனவே நம் தேவைக்கு எந்த கார் பொருந்துமோ அதற்கேற்ப மாற்றங்கள் செய்வது நல்லது. காரின் வெளித்தோற்றத்தை மாற்றி அமைக்க விரும்புவோர் கவனமாகவே அதை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பாடி கிட் மற்றும் ஸ்பாய்லர்கள் பொருத்துவதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில பாடி கிட்கள் வெளித்தோற்றத்தையே கெடுத்துவிடும். சில ஸ்பாய்லர்கள் வண்டியின் ஏரோடைனமிக் வடிவமைப்பையே மாற்றி விடலாம்
No comments:
Post a Comment