Translate

Tuesday, 13 August 2013

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை வணக்கக் கூட்டம் ஆகியவற்றின் துவக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.

தமிழகத்தில்
தமிழக அரசால்

ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்வாழ்த்து வாழ்த்துப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும்.

ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. இதை 1970ஆம் ஆண்டு தமிழக அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.

“"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"


இப் பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

புதுச்சேரியில்
புதுச்சேரி அரசால்

ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.[1]

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

No comments:

Post a Comment