ஹக்ஸ்வர்னாவை இந்தியாவில் களமிறக்கும் கேடிஎம்!!
இந்தியாவில் ஹக்ஸ்வர்னா சாகச ரக பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டோகிராஸ், என்டியூரோ மற்றும் ஆஃப் ரோடு ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஸ்வீடனை சேர்ந்த ஹக்ஸ்வர்னா உலக அளவில் பிரபலமானது. கடந்த 1900ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த பழம் பெருமை வாய்ந்த நிறுவனம் நீண்ட காலம் இத்தாலியை சேர்ந்த எம்.வி.அகஸ்ட்டா வசம் இருந்தது.
2007ம் ஆண்டில் இந்த நிறுவனத்தை பிஎம்டபிள்யூ வாங்கியதுடன், ஸ்ட்ரீட் ரக பைக்குகளையும் தயாரித்தது. ஆனாலும், ஹக்ஸ்வர்னா எதிர்பார்த்த அளவு வருவாய் வளர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில், ஹக்ஸ்வர்னாவை சமீபத்தில் பஜாஜ் ஆட்டோவின் கூட்டணி நிறுவனமான கேடிஎம் கையகப்பபடுத்தியது. இந்நிலையில், ஹக்ஸ்வர்னாவை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கேடிஎம் அறிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ., ஸ்டீபன் பியரர் இந்த தகவலை வெளியிட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் புனேயிலுள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் ஹக்ஸ்வர்னா பைக்குகள் உற்பத்தி துவங்கும் என்றும் அவர் கூறினார்.
இதுபற்றி அதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை. இருப்பினும், 2015ம் ஆண்டில் ஹக்ஸ்வர்னா பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கேடிஎம் ஆர்சி200 மற்றும் ஆர்சி390 ஆகிய பைக்குகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வருவதும் உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment