Translate

Tuesday, 21 January 2014

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் ஏற்றலாமா?

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் ஏற்றலாமா?

"அம்மாவின் ரத்தம் ஆர்.ஹெச் நெகட்டிவாக இருந்து, குழந்தையின் ரத்தம் ஆர்.ஹெச் பாசிட்டிவாக இருக்கும். முதல் பிரசவத்தில் இதனால் அந்தத் தாய்க்குப் பெரிய பிரச்னைகள் வந்திருக்காது. ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப் பிரிவுக்கு எதிராக அம்மாவின் உடலில் சில எதிர் உயிரிகள் உருவாகியிருக்கும். இரண்டாவது கர்ப்பத்தின் போது, அந்தக் குழந்தையும் ஆர்.ஹெச் பாசிட்டிவாக இருந்தால், அந்தக் குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டுக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையானது ரத்த சோகை நோயினால் பாதிக்கப்படும். அந்த பாதிப்பின் விளைவாக குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து பிறக்கலாம் அல்லது வயிறு ஊதிப் போய் பிறக்கலாம்.

  
அந்தக் குழந்தையை எந்த ஆபத்தும் இன்றி, பத்திரமாக இந்த உலகத்துக்குக் கொண்டு வரும் ஒரு மருத்துவ முயற்சியே ‘இன்ட்ரா யூட்டரைன் ஃபீட்டல் டிரான்ஸ்ஃபியூஷன்'. அதாவது, தாயின் வயிற்றின் வழியே, கருவிலிருக்கும் சிசுவுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தத்தை ஏற்றுகிற ஒரு சிகிச்சை இது.குழந்தைக்கு அம்மாவின் வயிற்றின் வழியே, குழந்தையின் தொப்புள் கொடியில் ஒரு ஊசியைச் செலுத்திதான் ரத்தத்தை ஏற்ற வேண்டும்.

கருவிலிருக்கும் குழந்தையானது அசைந்து கொண்டே இருக்குமே... அதற்கு எப்படி ரத்தத்தைச் செலுத்துவது? அப்படி ஊசியைச் செலுத்துவதால் அம்மாவுக்குப் பிரசவ வலி வந்து விடக் கூடாது. பனிக்குடம் உடைந்து விடக்கூடாது. எனவே முதலில் அம்மாவின் கர்ப்பப் பையைத் தளர்த்தி, வலியின்றி இருக்கச் செய்ய மருந்துகள் கொடுக்கப்படும். ஸ்கேன் உதவியுடன், குழந்தைக்கும் ரத்தம் ஏற்றி முடிக்கிற வரை கை, கால்களை அசைக்காமலிருக்க பிரத்யேக மருந்துகள் கொடுக்கப்படும்.

குழந்தையின் தொப்புள் கொடியில் உள்ள நரம்புகளை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் செய்யப்படுகிற இந்த சிகிச்சை மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டும் என்பதால் சிறப்பு சிகிச்சை மையங்களில்தான் அதைச் செய்வார்கள். குழந்தையின் வயிற்றைச் சுற்றியுள்ள அறைகளில் ஊசியின் மூலம் ரத்தத்தைச் செலுத்துகிற இன்னொரு முறையும் செய்யப்படுகிறது. ஆனாலும் முதல் முறைதான் மிகச் சிறந்தது. குழந்தையின் 18 முதல் 35 வாரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.

குழந்தையின் ரத்தத்தை சோதித்துப் பார்த்தோ அல்லது அதன் மூளைக்குச் செல்கிற ரத்தத்தை வைத்தோ அது ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து, பிறகே இந்த சிகிச்சை செய்யப்படும். ரத்த சோகையின் தீவிரத்தைப் பொறுத்து மறுபடி செய்யப்படலாம். சிகிச்சை முடிந்ததும், பிரசவ காலம் முழுமையடைகிற வரை காத்திருக்காமல், குழந்தையை சீக்கிரமே வெளியே எடுக்கவும் அறிவுறுத்தப்படும்..."

No comments:

Post a Comment