4ஜி மொபைல் போன் விற்பனை 67.8 கோடியை எட்டும்
உலக அளவில், வரும் 2015 ஆம் ஆண்டில், 4ஜி எல்.டி.இ. (Long-Term Evolution/ 4G LTE) நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன்களின் விற்பனை 67 கோடியே 80 லட்சமாக உயரும் என்று, அமெரிக்காவில் இயங்கும் “ABI Research” என்னும் ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. 2019ல் இது 189 கோடியை எட்டும்.
2014 ஆண்டின் இறுதியில், வர்த்தக ரீதியான எல்.டி.இ. நெட்வொர்க் கட்டமைப்புகள் அதிக அளவில் (350) அமைக்கப்படும். தற்போது எல்.டி.இ. தொழில் நுட்ப கட்டமைப்பு 14 நாடுகளில் 20 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில், 230 கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மொபைல் போன் நுகர்வோர்கள், 4.5 அங்குலம் முதல் 5.5. அங்குலம் வரையிலான அளவில் திரை உள்ள ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடுகின்றனர். ஆனால், 2015ல் 4ஜி அலைத் தொடர்பு இந்தியாவில் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகையில், அது தரும் மல்ட்டி மீடியா வசதிகளை அனுபவிக்க, கூடுதலான அகலத்தில் திரை உள்ள மொபைல் போன்களை மக்கள் விரும்பத் தொடங்குவார்கள்.
டேட்டா பரிமாற்ற வேகத்தில் கிடைக்க இருக்கும் கூடுதல் வேகம், 4ஜி ஸ்மார்ட் போன்களுக்கு கிராக்கியை உண்டாக்கும். பிராட்பேண்ட் இயக்க வேகமும், 2018ல், 40 Mbps ஆக அதிகரிக்கும். தற்போது இது 16 Mbps ஆக உள்ளது. பிராட்பேண்ட் இணைப்புகளில், 55% இணைப்புகள் நிச்சயம் 10 Mbps வேகத்திற்கும் மேலான வேகத்தில், 2018ல், இயங்கும். அதே ஆண்டில், ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில், பிராட்பேண்ட் வேகம் 100 Mbps ஆக உயர்ந்திருக்கும்.
No comments:
Post a Comment