கொல்கத்தா:
கொல்கத்தாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சீசன் 6 தொடக்கவிழா, கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக ஆரம்பமானது. கலைநிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்கிறது. விழாவில் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். நடிகர் ஷாருக்கான், நடிகைகள் கேத்ரினா கைப், தீபிகா படுகோன் ஆகியோருடன் 300 நடன கலைஞர்கள் நடனமாடுகின்றனர். பிரபல பாப் இசைப்பாடகர் பிட்புல் இசைமழை பொழிகிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை கடந்த 2008ம் ஆண்டு முதல் பிசிசிஐ நடத்தி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவின் 6வது சீசன் போட்டிகள் நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முன்னதாக இன்று தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது
இந்த சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா உள்பட சென்னை, மும்பை, டெல்லி, புனே, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகளுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் இம்முறை புதிதாக களமிறங்குகிறது. சன் ரைசர்ஸ் அணியை வலுப்படுத்தும் விதமாக பயிற்சியாளர் டாம்மூடி, வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனுஸ், ஆலோசகர்களாக மாஜி கேப்டன் ஸ்ரீகாந்த், லட்சுமண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சங்ககரா தலைமையிலான அணியை சிறந்த முறையில் இந்த சீசனுக்காக தயார்படுத்தியுள்ளனர். சன் ரைசர்ஸ் அணியில் துடிப்பான இளம் வீரர்கள் பலர் உள்ளனர். சன் ரைசர்ஸ் ஐதராபாத் தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 5-ம் தேதி புனே அணியை எதிர்த்து ஆடுகிறது.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி அணிகள் ஈடன் கார்டனில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடக்கிறது. மொத்தம் 72 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மே 21ல் குவாலிபயர்-1 ஆட்டமும், 22-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், 24-ம் தேதி குவாலிபயர் 2 ஆட்டமும் நடக்கிறது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிபயர் 1 ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். தோல்வியை தழுவும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்
லீக் ஆட்டத்தில் 3, 4வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் 1 ஆட்டத்தில் தோல்வி அடைந்த அணியுடன் பலப்பரீட்சை நடத்த வேண்டும். இந்த ஆட்டம் குவாலிபயர் 2 ஆகும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி மே 26-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த கிரிக்கெட் திருவிழா 53 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுகளில் பலப்பரீட்சை நடத்தும். சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.
இன்றைய தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் நடத்துகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார். 300க்கும் அதிகமான நடன கலைஞர்கள் ஓம் வடிவில் நின்று தாகூர் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். உலக புகழ்பெற்ற பாப் பாடகர் பிட்புல் இசைமழை பொழிகிறார். ‘ஐபிஎல் பிரபஞ்சம்’ என்ற தலைப்பில் ராட்சத பலூன் ஒன்று மைதானத்தில் வந்து இறங்குகிறது.
அதை தொடர்ந்து 9 அணிகளை குறிக்கும் வகையில் பலூன்களும் பறக்க விடப்படுகிறது. நடிகைகள் தீபிகா படுகோன், கேத்ரினா கைப் ஆகியோருடன் ஷாருக்கான் பல்வேறு இந்தி பாடல்களுக்கு நடனமாடுகிறார். சியர் லீடர்ஸ், பறக்கும் டிரம்மர்கள், அக்ரோபேடிக் நடனம், சீன குழுவினரின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்விக்கின்றன.
No comments:
Post a Comment