Translate

Wednesday, 1 May 2013

சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

புனே : புனே வாரியர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. புனே, சுப்ரதா ராய் சகாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்தது. சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக மைக்கேல் ஹஸி, விருத்திமான் சாஹா களமிறங்கினர். நல்ல பார்மில் இருக்கும் ஹஸி 5 ரன் மட்டுமே எடுத்த நிலையில், கேன் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறியது சூப்பர் கிங்சுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து சாஹாவும் 13 ரன் எடுத்து ராகுல் ஷர்மா சுழலில் எல்பிடபுள்யு ஆகி பெவிலியன் திரும்பினார்.

சென்னை அணி 5.4 ஓவரில் 28 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா , பத்ரிநாத் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. பொறுப்புடன் விளையாடிய இருவரும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர். இவர்களைப் பிரிக்க முடியாவிட்டாலும், வாரியர்ஸ் வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசியும் துடிப்புடன் பீல்டிங் செய்தும் கட்டுப்படுத்தினர்.

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. பத்ரிநாத் 34 ரன் எடுத்து (31 பந்து, 2 பவுண்டரி) லூக் ரைட் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் டோனி, எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு எகிறி ரைட் பந்துவீச்சை சிதறடித்தார்.

கடைசி கட்டத்தில் ரெய்னா , கேப்டன் டோனி ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. உறுதியுடன் விளையாடிய ரெய்னா அரை சதம் அடித்தார். டிண்டா வீசிய 18வது ஓவரில் 17 ரன் கிடைத்தது. சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. ரெய்னா 63 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 45 ரன்னுடன் (16 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து தோற்றது. ஸ்மித் 35, ரிச்சர்ட்சன் 26, குமார் 24* ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    தங்களின் வருகைக்கு நன்றி
     

No comments:

Post a Comment