குழந்தைகளுக்கு அவசியம் மசாஜ் செய்ய வேண்டுமா...?
ஒன்பது மாதங்கள் காத்திருப்பிற்கு பின் தனது செல்ல குழந்தையை மகிழ்ச்சியுடன் இவ்வுலகிற்கு வரவேற்ற பெற்றோர்கள் படிக்க வேண்டிய அவசியமான கட்டுரை இது. எந்த பெற்றோரும் ஒன்பது மாத தவத்திற்கு பிறகு ஈன்றெடுத்த குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்றே நினைப்பர். எனினும் பெரியவர்கள் நம் இந்திய கலாச்சார முறைப்படி என்று கூறும் சில மரபுகள் நம் குழந்தைக்கு ஏற்புடையதாக இருக்காது. அவற்றுள் ஒன்று தான் குழந்தைகளின் உடலுக்கு மசாஜ் செய்வது.
இந்த சடங்கு நம் நாட்டில் பல புதிய தாய்மார்களாலும் பின்பற்றப்படுகிறது. இதற்கு காரணம் பெரியவர்கள் மசாஜ் செய்வது குழந்தைகள் வளர்ச்சிக்கு நல்லது என்று கூறுவதனால் தான். ஆனால் மசாஜ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரிடம் ஆலோசித்தோம். அதன் சாராம்சம் இங்கே புதிதாக தாய் ஆனவர்களுக்காக தொகுத்துள்ளோம்.
குழந்தைகளுக்கு உண்மையில் மசாஜ் செய்ய வேண்டுமா? இந்த சடங்கு அவ்வளவு முக்கியமானதா?
மசாஜ் செய்வது ஒவ்வொரு தனி நபரின் முடிவு. அறிவியல் பார்வையில் இது அவசியமானது அல்ல, இந்திய மற்றும் ஆசிய பகுதிகளில் காணப்படும் ஒரு பாரம்பரிய நடைமுறை.
குழந்தைகளை பாதிக்குமா?
பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆயாக்கள் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் பொழுது மிகவும் அழுத்தி தேய்ப்பர். இதனால் வலி தாங்காமல் குழந்தை அழ நேரிடும். அதுமட்டுமின்றி ஆயாக்கள் வீடு வீடாக செல்வதால் நோய் தொற்றுகள் அவர்களது கை இடுக்குகளில் ஒட்டி கொள்ளும். மேலும் அது குழந்தைக்கு மசாஜ் செய்யும் பொழுது குழந்தைகளை பற்றி கொள்ளும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. அதமட்டுமல்லாமல் அதிக அழுத்தம் காரணமாக இளம் எலும்புகள் உடையவும், தோள்பட்டை எலும்புகள் இடம் பெயரவும் கூடும்.
யார் மசாஜ் செய்ய வேண்டும்?
குழந்தைகள் நல்ல படியாக உணர வேண்டும் என்றே மசாஜ் செய்யப்பட வேண்டும். ஆகவே இதனை பெற்றோரே மிகுந்த அன்பு மற்றும் அக்கறையுடன் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்ய சரியான முறை என்ன?
எந்த வித அழுத்தமும் குழந்தைகள் மேல் செலுத்த வேண்டியதில்லை. எண்ணெயையோ பவுடரையோ கூட உபயோகப்படுத்த வேண்டியதில்லை. மென்மையாக விரல்களை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.
எந்த வயது வரை மசாஜ் செய்ய வேண்டும்?
குழந்தை எந்த வயது வரை மகிழ்ச்சியாக ஏற்று கொள்கிறதோ, அது வரை செய்யலாம். உங்கள் குழந்தைக்கு மசாஜ் பிடிக்கவில்லையெனில் உடனே நிறுத்தி விடவும். குழந்தை மசாஜ் செய்வதை விரும்புகிறது எனில் ஒரு நாளைக்கு சில முறை செய்யலாம்.
No comments:
Post a Comment