குரு பார்வை
நூலகராகப் பணியாற்ற என்ன தகுதிகள் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்?
நூலகங்களை விரும்பாதவர் யார் இருக்கிறார்? லைப்ரரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நூலகங்கள் நம் அறிவு தேடலில் உதவுவதுடன் பொழுதுபோக்கின் உறைவிடமாகவும் இருக்கின்றன. இவை பொதுவாக தகவல்களைத் தரவும் அறிவை செம்மைப்படுத்தவும் செயல்படுகின்றன.
கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் அதீத வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளின் காரணமாக இவற்றின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் தான் நூலகர்களுக்கான தேவையும் பணி முக்கியத்துவமும் உலகெங்கும் அதிகமாக உணரப்படுவதைக் காண்கிறோம்.
நூலகரானவர் குறிப்பிட்ட நூலகத்தில் உள்ள புத்தகங்களை நிர்வகிப்பது, பராமரிப்பது மற்றும் பாதுகாத்து வைப்பது போன்ற தலையாய பணிகளைச் செய்கிறார். எண்ணற்ற புத்தகங்களிலிருந்தும் துறைப் பிரிவுகளிலிருந்தும் குறைந்த நேரத்தில், தேவைப்படும் தகவல்களைப் பெற உதவும் முக்கிய மனிதராகவும் இவரே இருக்கிறார்.
ஒரு நூலகத்தில் புத்தகங்கள், தொடர்இதழ்கள், மைக்ரோ பிலிம்கள், வீடியோ மற்றும் கேசட்கள், ஸ்லைடுகள் போன்றவை கல்வி, ஆய்வு, பொழுதுபோக்கு மற்றும் பார்வையிடுதலுக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை முறையாகப் பிரித்து, வரிசைப்படுத்தி, பார்வைக்கேற்ப வைத்து இவர்கள் தான் பராமரிக்கிறார்கள்.
தற்போதைய அறிவியல், தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கேற்ப இன்று நூலகங்களில் புத்தகங்கள் தவிர சிடி ரோம்கள், இன்டர்நெட், வர்ச்சுவல் லைப்ரரி மற்றும் தொலை தூரத்திலிருந்த தகவல்களைப் பெறும் வசதிகளும் உள்ளன.
நூலகங்களும் அவற்றின் தன்மைக்கேற்ப தற்போது பலவகையாகப் பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பொது நூலகம், குழந்தைகள் நூலகம், நிறுவனங்களுடன் இணைந்த நூலகம், தனியார் மற்றும் அரசுத் துறை நூலகம் போன்றவைகளும் நடமாடும் நூலகங்களும் இயங்குகின்றன. பிரெய்லி புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் புத்தகங்கள், கலை, இசை போன்ற பிரத்யேக புத்தகங்கள் இவற்றில் கிடைக்கின்றன.
நூலக அறிவியல் படிக்க குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் படிக்கக் கூடிய நூலக அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இதில் பட்ட மேற்படிப்பைப் படிக்கலாம். இது தவிர, இத் துறையில் எம்.பில்., பி.எச்டி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
இப் படிப்புகளை நாடெங்குமுள்ள பல கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், தொலை வழிக்கல்வி நிறுவனங்கள் வாயிலாகப் படிக்கலாம். சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வும் உண்டு. இப் படிப்புகளில் லைப்ரரி அண்ட் சிஸ்டம் மேனேஜ்மென்ட், கேடலாக்கிங் சிஸ்டம்ஸ், பிப்லியோகிராபி, டாகுமெண்டேஷன், பிரிசர்வேஷன் அண்ட் கன்சர்வேஷன் ஆப் மானுஸ்கிரிப்ட்ஸ்,
லைப்ரரி மேனேஜ்மென்ட், ரிசர்ச் மெதடாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், இன்பர்மேஷன் பிராசசிங், ஆர்கைவ் மேனேஜ்மென்ட், இன்டக்ஸிங், லைப்ரரி பிளானிங் ஆகிய பாடப்பிரிவுகள் இடம் பெறுகின்றன.
புத்தகங்களில் பொதுவாக நல்ல ஈடுபாடு, தகவல் தொடர்புத் திறன், வழிமுறை, திட்டமிடும் மற்றும் செயல்படுத்தும் திறன், பிறரின் தேவையை முன்கூட்டியே உணருதல், நல்ல பொதுஅறிவு, வெளியிடுதல், கம்ப்யூட்டரில் பணி புரியும் ஆர்வம் போன்ற திறமைகள் பெற்றவர்கள் இப் பணிக்கு பொருத்தமானவர்கள். பொது மற்றும் அரசு நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி
நிறுவனங்கள், செய்தித் தொடர்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறப்பு நூலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், போட்டோ மற்றும் பிலிம் லைப்ரரிகள், தகவல் மையங்கள், அதிக தகவல்களைக் கையாளும் நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், ஆய்வு மையங்களில் வேலை கிடைக்கும்.
நூலகங்களில் முதலில் லைப்ரரி அட்டெண்டாக துவங்கி லைப்ரரி அசிஸ்டண்ட், ஜூனியர் லைப்ரரியன், அசிஸ்டண்ட் லைப்ரரியன், டெபுடி லைப்ரரியன் மற்றும் லைப்ரரியன் என படிப்படியாக பணி முன்னேற்றத்தைப் பெறலாம்.
No comments:
Post a Comment