ரோமிங் கட்டணம் இல்லை
நாட்டில் படிப்படியாக ரோமிங் கட்டணம் இல்லாத நிலை உருவாகும் போல் தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள், ரோமிங் கட்டணங்களை ரத்து செய்ய இருக்கின்றன என்ற அறிவிப்பு வெளியாகியது. நாம் நம் மொபைல் போனில் பெறும் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், குறிப்பிட்ட தொலை தொடர்பு மண்டலத்திலிருந்து வேறு ஒரு மண்டலத்திற்கு ஒருவரின் மொபைல் போனுக்கு அழைப்பு வந்து பேசினால், அதற்கென விதிக்கப்படும் கட்டணமே ரோமிங் கட்டணமாகும்.
முதன் முதலில் வீடியோகான் நிறுவனம் தான், ரோமிங் கட்டணத்தை நீக்கியது. தன் நெட்வொர்க்கில் எந்த பகுதிக்குச் செல்கையில், அழைப்புகள் வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்கையில் ரோமிங் கட்டணம் இல்லை என அறிவித்தது. இதற்கென அதன் வாடிக்கையாளர்கள் எந்தவித விண்ணப்பமும் அளிக்க வேண்டியதில்லை என அறிவித்தது. இதன் பின்னர், மற்ற நெட்வொர்க்கில் தன் வாடிக்கையாளர்கள் செல்கையில், அதற்கான அழைப்புகளுக்குக் குறைந்த கட்டணத்தில் திட்டங்களைத் தந்தது.
எம்.டி.என்.எல். நிறுவனம் தன் மும்பை மற்றும் டில்லி வட்டத்தில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரோமிங் கட்டணத்தை நீக்கியுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த வசதியை நாள் ஒன்றுக்கு ரூ.1 கட்டணம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு, வோடபோன், நாள் ஒன்றுக்கு ரூ.5 வாங்கிக் கொண்டு ரோமிங் அழைப்புகளை இலவசமாக்கியது.
2012 ஆம் ஆண்டு புதிய தொலை தொடர்பு கொள்கையினை வகுக்கையில், மத்திய அரசு இந்தியா முழுமைக்கும் எந்த ரோமிங் கட்டணமும் இல்லாத நிலையை உருவாக்க கொள்கை முடிவு எடுத்தது. ஆனால், இது பல மொபைல் சேவை நிறுவனங்களைப் பாதிக்கும் என 2013 ஆம் ஆண்டில் சொல்லப்பட்டதால், குறிப்பிட்ட கட்டண வவுச்சர் வாங்கி, ரோமிங் கட்டணம் இல்லாமல் செய்திடலாம் என்ற முடிவிற்கு, அரசு அனுமதித்தது. இப்போது புதியதாக, பொதுத்துறை நிறுவனங்கள் சலுகையை அறிவிக்க இருக்கின்றன. இதற்கான மத்திய அமைச்சர் கபில் சிபல் விரைவில் இதனை அறிவிப்பார்.
No comments:
Post a Comment