மொபைல் இன்டர்நெட் பயனாளர்களை இலக்கு வைக்கும் யூனிநார்
தன் 2ஜி மொபைல் இணைய சேவை வர்த்தகத்தினை இரு மடங்காக இந்த ஆண்டில் உயர்த்த யூனிநார் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கென மிகக் குறைந்த கட்டணத்திலும், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்திடும் வகையிலும் பல கட்டணத் திட்டங் களை வெளியிட்டுள்ளது.
முதல் முதலாக, மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும் இந்த திட்டங்கள் மூலம் வளைத்துப் போட முயற்சிக்கிறது. ஒரு மணி நேர அளவில்லா பயன்பாட்டிற்கு 50 பைசா, சமூக இணைய தளங்களை மட்டும் பிரவுஸ் செய்து பயன்படுத்த மாதம் ஒன்றுக்கு ரூ.15 என்றெல்லாம் திட்டங்கள் தரப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.1 செலுத்தி பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யூனிநார் தற்போது, ஆறு தொலை தொடர்பு மண்டலங்களில், 3 கோடியே 40 லட்சம் சந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. இவர்களில் 80 லட்சம் பேர் இணையப் பயனாளர்கள். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த கட்டணத் திட்டங்கள் மூலம் இன்னும் பலர் புதியதாகவும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும், மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என யூனிநார் எதிர்பார்க்கிறது.
டேட்டாவிற்கு அளவு வைத்தே பல நிறுவனங்கள் இணைய திட்டங்களைத் தந்து வருகின்றன. அவ்வாறு இல்லாமல், எந்த டேட்டா வரையறையும் இன்றி, குறிப்பிட்ட காலம் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான திட்டங்கள், இணையத்தை அதிகம் பயன்படுத்துவோருக்கு இலாபகரமாய் இருக்கும். குறிப்பாக டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் சேட் பயன்பாடுகளை அதிகம் மேற்கொள்வோருக்கு இவை மிகவும் பயன்படும்.
இது போன்ற திட்டங்கள், தற்போது எஸ்.எம்.எஸ். மூலம் நிறுவனம் பெறும் வருமானத்தைப் பாதிக்காதா? என்ற கேள்விக்கு, வாடிக்கையாளர்கள் எதனை விரும்புகிறார்களோ அதனைக் குறைந்த கட்டணத்தில் தருவது எங்கள் நோக்கமாகும் என்று இந் நிறுவன உயர் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து கேட்டபோது, ரூ.600 கோடி திட்ட மதிப்பிட்டில், யூனிநார் நிறுவனத்தின் நெட்வொர்க் வலுப்படுத்தப்படும் என்றும், கூடுதலாக 5,000 மொபைல் கோபுரங் கள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment