ஐம்பது கோடி ஐ போன் விற்பனை
ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்த ஐ போன்களின் மொத்த எண்ணிக்கை சென்ற வாரம் 50 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் என் வழி தனி வழி என்று டிஜிட்டல் உலகில் பயணிக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது ஒரு சாதனைதான். எண்ணிக்கையைக் காட்டிலும், இவற்றின் மதிப்பு தான் பெரிய சாதனையாகும். எத்தனையோ டிஜிட்டல் சாதனங்கள், 50 கோடிக்கும் அதிகமாகவே விற்பனையாகியுள்ளன. ஆனால், ஐபோனின் விலை தான் இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். போன் ஒன்றின் விலை 500 டாலருக்கும் மேலாகத்தான் விலையிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதுவும் ஏழு ஆண்டுகளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ பாட், அறிமுகமாகி 10 ஆண்டுகளில் 40 கோடி விற்பனையானது. ஐபேட் சாதனமும், இதுவரை 20 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது. எனவே, ஐபோன் சாதனத்துடன் விற்பனை சாதனையுடன் ஒப்பிட வேறு எந்த நிறுவனத்தின் சாதனமும் இல்லை எனலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் எதிரி நிறுவனமான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், இது வரை 100 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. சரியாக எத்தனை என்ற எண்ணிக்கையைப் பெறுவது, விண்டோஸ் தொகுப்பைப் பொறுத்தவரை கடினம். பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களில், அவற்றைத் தயாரித்து வழங்கியவர்களாலேயே விண்டோஸ் இயக்க சாப்ட்வேர் வழங்கப்பட்டது.
இருப்பினும், இனி மேல் இன்னும் ஒரு சாதனம், ஏழு ஆண்டுகளில் 50 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுமா என்பது ஐயமே. சாதிக்கப் பிறந்தது ஆப்பிள் நிறுவனம் என்பது பலமுறை உண்மையாகியுள்ளது.
No comments:
Post a Comment