மனிதனின் தோன்றம் எப்போது என்பதில் புதிய திருப்பம்
நான்கு இலட்சம் ஆண்டுக்கு முந்தையதாக கருதப்படும் மனித தொடை எலும்பு புதைபடிமங்கள் இப்போது கிடைத்துள்ளன.
இந்த படிமத்தின் மூலம் கிடைத்த மனித மரபணு மூலம் இதுவரை இல்லாத சில அரிய தகவல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆதிமனிதன் தோன்றியது எப்போது என்பது பற்றி உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தவண்ணம் உள்ளனர். எனினும் இந்த காலகட்டத்தில் தான் ஆதிமனிதன் தோன்றினான் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.
காரணம், 80 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ஆதிமனிதனின் புதை படிமத்தை ஆராய்ந்ததில் நியாண்டர்தால் என்று தான் இதுவரை தெரியவந்தது.
மத்திய ஆசியாவில் இருந்து மேற்கு ஐரோப்பா வரை இடைப்பட்ட பகுதிகளில் தான் இந்த நியாண்டர்தால் மனித படிமம் கிடைத்தது. ஜெர்மனியில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தான் இந்த நியாண்டர்தால் மனித படிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ஐரோப்பிய பகுதிகளிலும், மத்திய ஆசிய நாடுகளிலேயே விஞ்ஞானிகள் கவனம் இருந்தது. ஆனால், போகப்போக மற்ற நாடுகளின் விஞ்ஞானிகளும் தொடர்ந்து இது தொடர்பாக ஆராய்ச்சிகளை செய்து வந்தனர்.
இதுவரை ஒரு இலட்சம் ஆண்டுக்கு முந்தைய மனித படிமம் தான் கிடைத்தது. இப்போது அதையும் தாண்டி 4 இலட்சம் ஆண்டுக்கு முந்தைய ஆதிமனித படிமம் புதிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மலை குகைப்பகுதியில் ஆதிமனித தொடை எலும்பு புதை படிமம் கிடைத்துள்ளது. 4 இலட்சம் ஆண்டுக்கு முந்தையதாக கருதப்படும் இந்த படிமத்தின் மூலம் ஆதிமனித மரபணு கண்டுபிடிக்கப்பட்டது.
சைபீரியாவில் 80 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ஆதிமனித படிமம் சில ஆண்டுக்கு முன் கிடைத்தது. அதன் பெயர் டெனிசோவன்ஸ். இங்கிருந்து சரியாக 4 ஆயிரம் கிமீ தூரத்தில் ஸ்பெயினில் கிடைத்துள்ளது தான் இந்த தொடை எலும்பு படிமம்.
இதனால் இது ஒரு இலட்சம் ஆண்டுக்கு முந்தைய நியாண்டர்தால் மரபில் வந்ததாக இருக்க வாய்ப்பில்லை. டெனிசோவன்ஸ் மரபில் வந்ததாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள பல்கலைக்கழக மனிதவியல் விஞ்ஞானி ஜோவன் லுயிஸ் அர்சுவாகா கூறுகையில், ‘ஓராண்டுக்கு முன்பு கூட இதில் எங்களுக்கு தெளிவில்லாமல் இருந்தது. ஆனால் மரபணு மூலம் தான் புதிய தகவல்கள் கிடைத்தன. இது ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்’ என்றார்.
அமெரிக்க விஞ்ஞானி ரீச் கூறுகையில், இந்த புதிய தகவல்கள், மனிதவியல் ஆய்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது. உச்சகட்ட வியப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்றார். ‘
நியாண்டர்தால் தான் எங்களை பொறுத்தவரை ஆதிமனிதன் தோன்றிய முதல் வம்சம் என்று நினைத்தோம். இப்போது கண்டுபிடித்த மனித படிமம் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார் நியாண்டர்தால் ஆய்வில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜெர்மனி விஞ்ஞானி மத்தியாஸ் மேயர்.
நியாண்டர்தால், டெனிசோவன்ஸ் ஆகிய இரண்டுமே மனித மூதாதையர் படிமங்களாக இருக்க கூடும். இரண்டை தவிர வேறு மனித படிமங்களும் கிடைத்து வந்தாலும், இரண்டு வகையில் தான் சேர்க்கப்பட்டு வந்துள்ளன.
அதனால் ஆதிமனிதன் தோன்றியதில் நடந்து வரும் ஆராய்ச்சிகளில் அடுத்த ஒரு கட்டத்தை தான் நாம் அடைந்துள்ளோம் புதிர் என்னவோ விலகவில்லை என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment